மதுரை: ரயில் பாதை பராமரிப்பு பணியில் காரணமாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக, திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.
இதே காலத்தில், சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.