தென்னக ரயில்வே ரயில் நிலையங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி, காப்பகங்களில் சேர்த்தல், மறுவாழ்வு அளிப்பதில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன், "ரயில்வே காவல் துறை இயக்குனர் டாக்டர் சைலேந்திர பாபு, கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், வயது முதிர்ந்த பெரியவர்களை மீட்டு அவர்களை குளிப்பாட்டி, புதிய உடைகள் அளித்து தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்துவருகிறோம்.
அவர்களை முதியோர் காப்பகங்கள், நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகங்களில் சேர்த்துவிடுவதையும் முக்கிய பணியாக செய்துவருகிறோம். இதனால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தற்போது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பயணிகளின் நிம்மதியான பயணத்திற்கும் ரயில்வே காவல் துறை வழிவகை செய்துள்ளது.