மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் இணைந்து மதுரை புதூர் பகுதியில் நேற்று (மார்ச்.30) பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது நடிகை ராதிகா பேசுகையில், ”சில கட்சிகளின் கருத்துக்கணிப்பு தமக்கு சாதகமாக இருக்கிறது என பேசிக்கொள்கின்றன. இந்த கருத்துக் கணிப்புகள் உண்மை அல்ல; பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாகவே கருத்துக்கணிப்புகள் உள்ளன. இரண்டு கழகங்களும் தேர்தலில் வெற்றி பெற்றால் பங்கு போட்டுக் கொள்வதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன.
இவர்கள் கையில் நாட்டை கொடுத்தால் உருப்படுமா? அஞ்சாநெஞ்சன் ஒருவர் அனைவருக்கும் போன் செய்து சொல்கிறார் திமுக வரக்கூடாது என, அவர் ஒருவரே போதும். அதேபோல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை இல்லாமல் அதிமுக திண்டாடி கொண்டிருக்கிறது.
இதனாலேயே அவர்கள் வெற்றி பெறுவதற்கு எல்லா வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் கொடுக்காத வாக்குறுதி என்னவென்றால் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி தருவது மட்டும்தான். கொஞ்சம் விட்டால் அதையும் செய்து, முதலிரவையும் ஏற்பாடு செய்வார்கள்.
கமல் ஹாசன் சொந்த உழைப்பால் முன்னேறியவர். சினிமாவிற்காக நிறைய செய்திருக்கிறார். இன்று பொது வாழ்விற்கு எதற்காக வந்தார் என்றால் உங்களுக்காக ஒரு மாற்றம் கொண்டுவரத்தான். நாங்கள் வியாபாரிகள் அல்ல இப்போது அறிவித்துள்ள அறிவிப்புகள் யாராலும் செய்ய முடியாது.
பரப்புரையில் பேசிய ராதிகா சரத்குமார் அடுத்து ஆட்சிக்கு வருபவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். எனவே நீங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லாவிட்டால் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும். மதுரைக்காரர்களுக்கு நம்மை எதுவும் தாக்காது என்ற துணிச்சல் உண்டு. அலட்சியம் காட்டாமல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:'எனது எஞ்சிய வாழ்நாள்கள் மக்களுக்காகவே' - கமல் ஹாசன்