தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிராம சபை கூட்டங்கள் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றும் கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

cancellation of village council meetings  r p udhayakumar  r p udhayakumar gandhi function
'கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

By

Published : Oct 2, 2020, 7:53 PM IST

மதுரை: மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேலமாசிவீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கதர் விற்பனையை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றில் மதுரைக்கு முக்கியமான பங்குண்டு. 1921ஆம் ஆண்டு காந்தியின் அரையாடைத் தோற்றத்தை தீர்மானித்தது மதுரைதான். 1946ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு வெற்றியடைந்ததை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.

1948ஆம் ஆண்டு மகாத்மா உயிரிழந்தபோது, அவர் அணிந்திருந்த ஆடை, கைக்குட்டை, மூக்குக் கண்ணாடி உள்பட 14 பொருட்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் விடுதலைக்காக காந்தியடிகள் 2,119 நாட்கள் சிறையிலிருந்திருக்கிறார் என்பது மிகப் பெரிய தியாக வரலாறு.

ஆனாலும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக கடைசி வரை உறுதியாக இருந்திருக்கிறார். உலகிற்கு காந்தியடிகள் அளித்த அஹிம்சை தத்துவம் இன்று வரை மகத்தான ஒன்றாகத் திகழ்கிறது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

காந்தி விரும்பிய கதர் ஆடையை பொதுமக்களிடம் ஊக்குவிக்கு வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கதர் ஆடைகளுக்கு 30 விழுக்காடு தள்ளுபடி அளித்திருக்கிறார். இன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய சூழல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்ட மசோதாவைக் காரணம் காட்டி கிராம சபைக்கூட்டம் நடைபெறவில்லை என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளின் தேவையற்ற பரப்புரை. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமல்ல. தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் முனைப்புடன் இருந்தது அதிமுகவா? திமுகவா? என்பது மக்களுக்குத் தெரியும். திமுக எந்தெந்த உரிமைகளையெல்லாம் மீட்டது என்பது குறித்து அவர்கள்தான் விளக்க வேண்டும்.

ஹத்ராஸ் சம்பவம் எல்லோருக்குமே வேதனையைத் தரக்கூடியது. ஆனால், பெருந்தொற்று காலத்தில் சட்டத்தை மதித்து நடப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. இது ராகுல்காந்திக்கும் பொருந்தும். தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது நல்லது. அதிமுக முன்னெடுக்கின்ற திட்டங்கள் பல்வேறு தரப்பில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. ஆனால், திமுகவுக்கு அப்படி எந்த சாதனையும் கிடையாது. திமுக ஒரு காலிப்பானை. அதிமுகவில் எந்த ஒரு குழப்பமும் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க:மகாத்மாவின் நினைவுகளை இன்றும் சுமக்கும் மதுரை

ABOUT THE AUTHOR

...view details