மதுரை:தென்காசி மாவட்டம், அரியநாயகிபுரம் கிராமத்தில் கட்டடத் தொழிலாளியான ஆறுமுகம்-மாரியம்மாள் தம்பதியினரின் ஏழாம் வகுப்பு படித்து வந்த மகன் சீனு. இவர் கடந்த அக்.14ஆம் தேதி தனது பள்ளி சீருடையுடன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
இந்நிலையில், இதுகுறித்த உண்மை நிலையை அறிய மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலாளர் பேரா.இரா.முரளி தலைமையில் குழுவினர் கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லையா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சக்தி முருகன் ஆகியோர் பட்டியல் இன மாணவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னணியில் நடந்தவை:மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவருடன் படிக்கும் சக மாணவர்களை பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் சீனுவுக்கு வயிறு வலி அதிகம் இருந்தது என்றும்; அதனால் அவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் எழுதி தருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்போதுமே வகுப்பறையில் கடைசியில் தான் அமர வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுள்ளது என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.