மதுரை:உசிலம்பட்டி அருகே 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலை அழித்த கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேவுள்ள தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீ ரங்காபுரம் கிராமத்தில், 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்னமலை மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஜமீன் காலத்திலிருந்து இருக்கும் இந்தக் கோயிலில், கடந்தாண்டு வரை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குள்பட்ட 13 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா கொண்டாடப்பட்டுவந்தது.
இந்நிலையில், இந்தாண்டு திருவிழா நடத்த முடிவுசெய்த கிராம மக்கள், சுத்தம் செய்வதற்காக கோயிலுக்குச் சென்றுள்ளனர். ஆனால், கோயிலின் அருகேயுள்ள தனியார் விவசாய கல்லூரி நிர்வாகத்தினர், பொதுமக்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் ஏன் தடுத்து நிறுத்தினார்கள் என கிராம மக்கள் ஆய்வுசெய்ததில், கல்லூரி அருகே இருந்த 150 ஆண்டுகள் பழமையான சின்னமலை மகாலிங்கம் கோயிலை இடித்து, தரைமட்டமாக்கி அழித்துவிட்டு கல்லூரி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கரோனா காலத்தில் மக்கள் கோயிலுக்குச் செல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பழமையான கோயிலை அழித்த கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், உசிலம்பட்டி முருகன் கோயிலிலிருந்து, உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் மனு அளித்தனர்.
ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து கல்லூரி நிர்வாகத்தின் மீது கொடுத்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராஜ்குமார், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான அலுவலர்கள், இந்த விவகாரம் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் ஊராட்சித் தலைவர் - காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார்