மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அழகர் கோயில். இந்த மலைப்பகுதி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகத் திருத்தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலைமீது உள்ள சோலைமலை முருகன் கோயிலிலும், ராக்காயி அம்மன் கோயிலிலும் வழிபாடு நடத்த வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மலைப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் காட்டுப் பகுதியில் உலாவும் காட்டெருமைகள் அழகர் கோயில் மலைப்பாதையில் தண்ணீருக்காக உள்ளே வரத் தொடங்கியுள்ளன. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன சரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அழகர் கோயில் மலைப் பகுதியில் மலைப் பாதையை ஒட்டி செல்லும் நீரோடை, கருடர் மற்றும் அனுமார் தீர்த்தத்தில் உள்ள தண்ணீரைப் பருகுவதற்கு மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் காட்டு மாடுகள் வருவது வழக்கம்.
மேலும் இப்பகுதியில் வரும் பொதுமக்கள் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை வழங்குகின்றன. அதனை உண்ணுவதற்கும் காட்டெருமைகள் கீழே இறங்கி வருகின்றன.