மதுரை:தமிழ்நாடு நிதி அமைச்சர்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல பத்தாண்டு காலங்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். உலகின் மிக முக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றிற்கு நிர்வாக இயக்குநர், சர்வதேசத் தலைமை பொறுப்பையும் ஏற்று பணியாற்றியுள்ளேன். ஆனால், என் வாழ்நாள் பணி அனுபவத்தில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் அமைச்சர் எனும் பொறுப்பு.
முதலமைச்சர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலும், நான் பொது வாழ்க்கையில் ஈடுபட அவசியமாகவும், அது சாத்தியப்படவும் காரணமாக இருந்த என் முன்னோர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், என் திறன்கள் அனைத்தையும் பயன்படுத்தி என் கடமைகளை நிறைவேற்றி நிச்சயம் பாடுபடுவேன்.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகை, இணைய ஊடகம், தொலைக்காட்சி, வானொலி என 50க்கும் மேற்பட்ட ஊடக அழைப்புகள் வந்தன. என் நன்றிக்கு அடையாளமாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிப்படையான அரசு நிர்வாகம் எனும் தத்துவத்தின் அடிப்படையிலும் அவற்றுள் 12 அழைப்புகளை மட்டுமே நான் ஏற்றேன்.
இந்த நேர்காணலின்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது, ஜக்கி வாசுதேவின் விதிமீறல்கள் ஆகிய இரண்டு தலைப்புகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன. இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது நான் பதில் அளித்து இருந்தாலும், இவை இரண்டும் என் அமைச்சகத்து சம்மந்தப்பட்டவை அல்ல என்பதையும், என் கவனம் இதுபோன்ற விஷயங்களில் சிதறுவதை இனி நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், துறைகளும் இவ்விஷயங்கள் மீது தக்க சமயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர் சக பணியாளன் மற்றும் குழுவில் ஓர் அங்கம் என்ற வகையில் தேவைப்படும்போது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க என் கருத்துகளையும், ஆதரவையும் நான் அளிப்பேன். வெளியிடப்பட வேண்டிய மிகமுக்கிய கருத்துகள் அனைத்தும் அண்மையில் நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். எனவே, இம்மாத இறுதிவரை ஊடகம் சார்ந்த சந்திப்புகள் அனைத்தையும் நிறுத்தி கரோனா தொடர்பான பணிகளில் என் முழு கவனத்தையும் செலுத்தவிரும்புகிறேன்.
கோயில்களுக்கு பல பங்களிப்பைச் செய்த எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கோயில்கள் அரசிடம்தான் இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கையில் எவ்வித பங்களிப்பும் செய்யாத போராளிகள் கோயில்களை தனியாரிடம் ஒப்படையுங்கள் என கூக்குரலிடுவது முரண்நகையாக இருக்கிறது.