மதுரைமக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வரும் மெட்ரோ ரயில், விரைவில் நனவாக உள்ள நிலையில் அது குறித்த அறிவிப்பு ஒன்றினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
மதுரை மெட்ரோ ரயில் குறித்து அவர் கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு, 'சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும். இதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பின்னரே திட்டமிட்டப்படி அறிக்கை தயாரிக்கப்படும். மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.