தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக்குக்கு டாட்டா... பிளாஸ்டோனுக்கு வெல்கம் - பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - how to overcome plastic pollution

பிளாஸ்டிக் கழிவுகளை பிளாஸ்டோனாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறார் அதனைக் கண்டுபிடித்த பேராசிரியர், முனைவர் பத்மஸ்ரீ வாசுதேவன்.

Professor who invented Plastone to overcome the plastic pollution

By

Published : Nov 18, 2019, 4:05 PM IST

உலகம் முழுவதும் பெருகிப்போன பிளாஸ்டிக்கால் மண் வளம் மட்டுமில்லாது நீர் வளம், சுற்றுச்சூழலும் சேர்ந்தே பாதிக்கப்படுகிறது. அழிக்கவே முடியாத பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இவ்வாறான சூழலில்தான், செராமிக், கிரானைட்ஸ், காங்கிரீட் கழிவுகளுடன், அழிக்கவே முடியாத பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து குறைந்த செலவில், நிறைந்த தரமுடைய தரைக்கற்கள் எனப்படும் 'டைல்ஸ்' தயாரித்தால் கட்டுமானச் செலவுகள் பெருமளவு குறையும் என்கிறார் பிளாஸ்டிக் தார்ச்சாலை தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த பேராசிரியர், முனைவர் பத்மஸ்ரீ வாசுதேவன்.

தொடர்ந்து அவர் நமது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 'பிளாஸ்டோன்' என்ற புதிய வகை டைல்ஸ்களை தயாரிக்க முடியும். செராமிக், கிரானைட்ஸ், கான்கிரீட் கழிவுகளோடு, பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து இப்புதிய வகை தரைத்தளக் கற்களை தயாரிக்க முடியும்.

பிளாஸ்டோன், கான்கிரீட்டை விட ஐந்திலிருந்து பத்து மடங்கு வலுவானது. இப்புதிய முறையின் மூலமாக டைல்ஸ், செங்கல், ஹாலோ பிளாக்ஸ் ஆகியவற்றை உருவாக்க முடியும். மேஜைகளின் மீது அமைக்கப்படும் டைல்ஸ்களாகவும் இதனை உபயோகிக்கலாம். அதுமட்டுமன்றி கட்டுமானத்துறையின் பல்வேறு கூறுகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டோன் தயாரிக்கும் முறை குறித்து விளக்கும் பேராசிரியர், முனைவர் பத்மஸ்ரீ வாசுதேவன்

மிகக் குறைந்த அளவிலான செலவு என்பதால், கழிவறைகள் கட்டுவதற்குப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இதனைக் கொண்டு வீடுகள் கட்டுவதற்காகவும் எங்களை அணுகியுள்ளனர். அதற்குரிய ஆய்வுப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் பயன்பாட்டை அதிகரித்தால் மிகப் பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படும். அவ்வாறு தேவை அதிகமாகும்போது, பிளாஸ்டிக்கை அழிக்க முடியாது என்றாலும் அதனை உபயோகும்படி மாற்றலாம்.

தார்ச்சாலை அமைப்பதற்கு பத்தில் ஒரு பங்குதான் பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. ஆனால் 'பிளாஸ்டோன்' தயாரிக்கப் பாதிக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படும். ஒரு கழிவறை கட்டுவதற்கு 500 கிலோ பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஒரு கோடி கழிவறை கட்டுகிறார்களென்றால், அரைக் கோடி பிளாஸ்டிக்குகள் நமக்குத் தேவை. ஆகையால் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கினால், அவற்றை முறையாக பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டோன் தயாரிக்கும் முறை குறித்து விளக்கும் பேராசிரியர், முனைவர் பத்மஸ்ரீ வாசுதேவன்

கட்டுமானத்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை இப்புதிய 'பிளாஸ்டோன்' ஏற்படுத்தும். தற்போது உலகம் முழுவதும் இதனைக் கேட்கிறார்கள். இதற்குரிய காப்புரிமைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்குப் பிறகு இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உரிமையை இந்தியர்களுக்கே வழங்குவேன்', என்றார். இவரின் பிளாஸ்டோன் கண்டுபிடிப்பு வெற்றியடைந்தால், பிளாஸ்டிக்கிலிருந்து உலகம் விடுதலையாகும் நாள் வெகுதொலைவில் இல்லை எனலாம்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குட்-பை சொல்லும் சிங்கப் பெண்கள்..!

ABOUT THE AUTHOR

...view details