தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2023, 9:50 AM IST

ETV Bharat / state

மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்துத்தை உருவாக்கும்: பேராசிரியர் ஜவஹர் நேசன்

தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென்றால் அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமத்துவத்தை உருவாக்கும். அதை நோக்கியே தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.

Professor Jawahar Nesan participated and spoke in a consultative meeting held in Madurai on behalf of the Tamil Nadu Higher Education Protection Movement
மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்துத்தை உருவாக்கும் - பேராசிரியர் ஜவஹர் நேசன்

மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்துத்தை உருவாக்கும் - பேராசிரியர் ஜவஹர் நேசன்

மதுரை:தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மதுரையில் தனியார் விடுதியொன்றில் 'தமிழ்நாடு கல்விக்கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கைக்குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் நேற்று (மே 27) உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், “பல நாடுகள் மற்றும் பல கல்வி அமைப்புகளில் பணியாற்றியபோதும்கூட கடந்த 25 ஆண்டுகளாக மக்களோடு இணைந்த தொடர்பு மற்றும் களப்பணியில்தான் இருந்து வந்தேன். கடந்த ஓராண்டாக மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணியில் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றினேன். இதனால் மக்களுடனான எனது நேரடித் தொடர்பு இல்லாமலிருந்தது. தற்போது மீண்டும் அதற்கான காலம் உருவாகியிருப்பதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன்.

மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் தமிழக அரசு என்னை உறுப்பினராக்கி அறிவித்தபோது பெரிதும் மகிழ்ந்தேன். வணிக மயம், சாதி, மதம் சார்ந்த கல்வி முறைகள்தான் கடந்த 75 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவிலிருந்து வருகிறது. தற்போது மூன்று அங்கங்கள் இந்தக் கல்வி முறையைத் தீர்மானிக்கும் காரணிகளாக வளர்ந்துள்ளன. சந்தை, அதிகாரம், அரசு ஆகியவையே அந்த அங்கங்கள்.

இதனைத் தாண்டி தங்களின் கல்வி முறையைச் செயல்படுத்துகின்ற நாடுகளில் வெகு குறைவே. இந்த மூன்றின் கூட்டணிதான் இந்தியாவில் கல்வியைத் தீர்மானிக்கும் ஆற்றல்களாக உள்ளன. இங்குக் கல்வி என்பது விமர்சனப்பூர்வமாக, வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதற்குத் தேவையான ஆசிரியர்கள், கட்டமைப்புகள், பயிற்சிகள் அனைத்தும் அவசியம்.

அதுபோன்ற கல்வி சார்ந்த சூழல் அமைவு என்பதை உருவாக்கினால் மட்டுமே மக்களுக்கான கல்விக் கொள்கை சாத்தியமாகும். ஒரு கருத்தை உள்வாங்குவதில் சகிப்புத்தன்மை இல்லையென்றால் எவ்வாறு இங்கே சிந்தனையாளர்கள் உருவாக முடியும்..? அந்த சகிப்புத்தன்மை என்பது ஜனநாயகத்தின் ஒரு கோட்பாடு. சமத்துவம் இருந்தால்தான் சகிப்புத்தன்மை வளரும். நீயும் நானும் சமம் என்ற நிலை இருக்கும்போதும் அறிவை உள்வாங்குவதும், வெளிப்படுத்துவதும் இயலும்.

அதன்பால் உள்ள உண்மையை விமர்சனப்பூர்வமாக உணரும்போதுதான் புதிய அறிவை வெளிப்படுத்த முடியும். அதற்குத்தான் நல்ல அரசும், கூடி வாழும் தன்மையும் தேவை. ஆனால் அதற்கு மாறான நிலையே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கல்விக்கூடங்கள் என்ன செய்தன?” என்றார்.

கல்வியாளர் பிரபா கல்விமணி பேசுகையில், “கல்விக் கொள்கையில் பயிற்று மொழியாகத் தாய்மொழிக் கல்வியான தமிழ் என்பது மிகவும் அவசியம். ஆங்கிலத்தில் கற்பது கௌரவமாகவும் தமிழில் கற்பதை கேவலமாகவும் பார்க்கின்ற மனநிலையை மாற்ற வேண்டும். தொடக்கக்கல்வியில் இரு மொழிகள் என்ற நிலை உலக நாடுகளில் எங்கும் கிடையாது. 2-ஆவது மொழியை 8 அல்லது 10 வயதில்தான் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை. ஆகையால் பயிற்று மொழியை முதன்மையான சிக்கலாகக் கல்விக் கொள்கை வகுப்போர் கருத வேண்டும்” என்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேசுகையில், “மத்திய அரசின் கல்விக் கொள்கையைத் தான் இவர்கள் வேறு பெயரில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமத்துவமான கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கான தொடக்கப்புள்ளியே பேராசிரியர் ஜவஹர் நேசனின் இந்த ஆவணம். இதனைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களைத் திரட்டி நாம் இதற்காக வேலை செய்தோமேயானால் தமிழக அரசுக்கு அழுத்தத்தை உருவாக்க முடியும்” என்றார்.

முன்னதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் எழுதிய 'தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குதல்' என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் பேராசிரியர் முரளி, பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேராசிரியர் ஜவஹர் நேசனிடம் கலந்துரையாடினர்.

நிறைவாக மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பரவலாக அனைத்துத்தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகக் கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கொண்ட புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இக்கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் மகளுடன் சேர்ந்து தாயும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details