மதுரை: உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறும். தேவர் குருபூஜை அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவும், மற்றும் 59வது குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செலுத்துவர்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் முளைப்பாரி எடுப்பது, பொங்கல் வைப்பது, அபிஷேகம் செய்வது போன்றவற்றை பசும்பொன் கிராமத்தில் முன்னெடுப்பர். பொதுவாக தனியார் வாகனங்களில் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இந்த மரியாதையைச் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு தனியார் வாகனங்களில் சென்று மரியாதை செலுத்த அனுமதிக்க கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
ஆகவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.