கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவை அடுத்து மதுரையில் அரசு, மாநகராட்சி பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
ஆனால் மதுரையில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகளை நடத்தி வருகின்றன.
பள்ளி வாகனங்களை இயக்கினால் தெரிந்துவிடும் என்பதால் பள்ளி வாகனங்களை இயக்காமல் மாணவர்களை பேருந்து, பெற்றோர் மூலம் பள்ளிக்கு வரச் செய்து வகுப்புகளை நடத்தி வருகின்றன. மேலும் மாணவர்களை சீருடை அணிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்பாக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாலும் கூட குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.