தனியார் பொறியியல் கல்லூரி தற்காலிக கரோனா மருத்துவமனையாக மாற்றம் - தனியார் பொறியியல் கல்லூரி
மதுரை: மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை அடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தற்காலிக கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ தாண்டியுள்ளது.
இதனால் கரோனா நோய்தொற்றுக்காக உருவாக்கப்பட்ட அண்ணா நகர் கரோனா சிறப்பு மருத்துவமனை, அரசு விபத்துப் பிரிவில் அமைக்கப்பட்ட கரோனா பிரிவு, ஆஸ்டின்பட்டி அரசு தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கரோனா மருத்துவமனை அனைத்தும் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
இதனால் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள விடுதியில் 200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் 'ஏ' சிம்டம் (அ) அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்றாளர்கள் தங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி - சுகாதாரத் துறை இணைந்து உருவாக்கிவருகின்றன.
இதற்கு நோடல் அலுவலராக மதுரை அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் மருதுபாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஜூன் 26) மாலைமுதல் கரோனா நோயாளிகள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி, உணவு போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவருகின்றன.