மதுரை:மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பப் படிவத்தையும் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது; 'மதுரை மாநகர் பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தி திணிப்பு நடைபெறுவதாக கூறும் அமைச்சர் பொன்முடி சுயபரிசோதனை செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு வரை இந்தி 3ஆவது மொழியாக தான் இருந்தது, 2019இல் தான் தேசிய கல்விகொள்கையில் 3ஆவது மொழி என்பது தேர்வாகவுள்ளது. இந்தி மொழியை திணிக்ககூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம்.
தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய கல்விகொள்கை, மாற்று பெயர்களில் இல்லம் தேடி கல்வி எனும் பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் பயின்றுவருகின்றனர். ஆகவே பாஜக அரசில் தான் இந்தி மொழி திணிப்பு இல்லை.
கோவை வெடிப்பு சம்பவத்தில் 24ஆம் தேதி, நான் மனிதவெடி குண்டு தாக்குதல் என்றேன். ஆனால் குண்டுவெடித்து 54 மணி நேரம் கழித்து தான் பயங்கரவாத தாக்குதல் எனக் கூறுகிறார்கள், ஆர்.எஸ். பாரதி பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் பாஜக தான் வெடிப்பு சம்பவத்தை வெளிக்கொண்டுவந்தது.
இந்த வெடிப்பு சம்பவத்தை மறைத்தது திமுக தான், பாஜக வெளிப்படுத்தாவிட்டால் சிலிண்டர் குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையே திமுக அரசு கொடுத்திருக்கும். ஆர்.எஸ். பாரதி அரசியலுக்காக பேசிவருகிறார்.
மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது, பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை இங்கு தான் உள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழ்நாடு மதுவாலும், கஞ்சாவாலும் சீரழிந்துள்ளது. தற்போது காவல் துறையின் கை கட்டிப்போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விபரீதத்தை ஏற்படுத்தும், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவது புதிது.
காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்கா? காவல்நிலையங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துக்களை தடுக்க வேண்டும். காவல் துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி , பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும்.