இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும் சாதி
ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒன்றை வைத்து மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மற்ற நாடுகளில் அது இனமாகவோ, நிறமாகவோ இருக்கிறது. இந்தியாவில் மட்டும் அது சாதியாகவும் மதமாகவும் இருக்கிறது .
மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இந்தியாவில் இந்து மதத்தால் நிலைநிறுத்தப்படும் கோட்பாடாக சாதியக் கட்டமைப்பு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒருவர் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும், எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவராகவே இங்கே கருதப்படுவார்.
பெரியார் கண்ட கனவு
இந்த ஏற்றத்தாழ்வை உடைத்தெறிவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் சா’தீ’க்கு எதிரான போர்க்களமாக மாற்றியவர் தந்தை பெரியார். அவர் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எண்ணினார். கோயில் கருவறைக்குள் தீண்டாமை இருக்கக் கூடாது, பிராமணர் அல்லாதோரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை அவர் மிகத்தீவிரமாக முன்வைத்தார்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிராக நின்ற அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர் எரிப்பதற்குத் தயங்கவில்லை. தன் இறுதிமூச்சு வரை அதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சட்டம் கொண்டுவந்த கருணாநிதி, தடுத்துநிறுத்திய சேஷம்மாள் வழக்கு
1970இல் முதலமைச்சராக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மசோதா நடைமுறைக்கு வந்தபோதிலும், அதனை முடக்க மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள், சேஷம்மாள் உள்பட 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு நீதித்துறையில் சேஷம்மாள் வழக்கு என்று நிலைபெற்றுள்ளது.
அப்போது, வாரிசு அடிப்படையில் பிராமணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை ஒழித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும் என்றும், ஆனால், ஆகம விதிப்படி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை விமர்சித்த பெரியார், “ஆபரேசன் வெற்றி... நோயாளி மரணம்” என்று கூறியிருந்தார்.
பெரியார் நெஞ்சில் குத்திய முள்; நீக்கிய கருணாநிதி
இதனால், அச்சட்டமும் அப்படியே முடங்கியது. பெரியாரின் கனவுகளில் ஒன்றான இச்சட்டம் நிறைவேறாமலேயே அவரும் மறைந்துபோனார். அதனால்தான், பெரியார் காலமானபோது (1973), கருணாநிதி இவ்வாறு கூறுகிறார். “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்” என்பதே அது.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்ட இச்சட்டம் 2006இல் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, சாதியப் பாகுபாடு இல்லாமல், தகுதியும் பயிற்சியும் பெற்ற எவரும் அர்ச்சகராகலாம் என்ற அவசரச் சட்டத்தை நிறைவேற்றினார். பின்னர் அதனை முறைப்படி, ஆகஸ்ட் 29ஆம் தேதி தனிச்சட்டமாகப் பிறப்பித்து, “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவற்கான நடவடிக்கைதான் இது” என்று கருணாநிதி சட்டப்பேரவையில் சூளுரைத்தார்.
அதன் தொடர்ச்சியாக 2007இல் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் ஆகமப் பயிற்சி நிலையங்களையும் அவர் உருவாக்கினார். அந்நிலையங்களில், அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.
மீண்டும் ஒரு சட்டப் போராட்டம்
இருப்பினும், இச்சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2015, டிசம்பர் 14இல் இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது. ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு வெளியான பின், 3 ஆண்டுகள் கழித்துத்தான் 2018இல் மதுரையைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர், மதுரை அழகர் கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டார். இவர், 2007-08 ஆண்டில் செயல்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று தேர்வான 206 பேரில் ஒருவர்.
தேர்ச்சிபெற்ற 206 பேரில் இருவர் மட்டுமே நியமனம்
இதையடுத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் இரண்டாவதாக தியாகராஜன் என்பவர் ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான நாகமலை சித்தி விநாயகர் கோயில் அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட்டார்.
இருப்பினும் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணிபுரியும் பட்சத்தில், அவர் ஆகம விதிகளில் தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டி அர்ச்சகர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கலாம். இதனை, நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்பின் 43ஆம் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'கண்முன் நடக்கும் தீண்டாமையைக் கண்டுகொள்ளத அரசு'
குளம், சுடுகாடு ஆகியவற்றில் தீண்டாமையைக் கடைப்பிடித்தால் குற்றமாகக் கருதும் தமிழ்நாடு அரசு, கண்முன் கோயில் கருவறையில் நடக்கும் தீண்டாமையை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது, என்ற கேள்வியோடு பேசத் தொடங்குகிறார், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன்.
”இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. 1947ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பிராமணர் அல்லாதோருக்கான அர்ச்சகர் பணி நியமனங்கள் இரண்டே இரண்டு மட்டும்தான் நிகழ்ந்துள்ளன. அதுவும் ஆகம விதிகளற்ற கோயில்களிலேயே இரண்டு பேரும் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள் பிடுங்கப்பட்டது; ஆனால் காயம் ஆறவில்லை! ஏன் பெரிய கோயில்களில் பிரமணர் அல்லாத ஒருவர் நியமனம் செய்யப்படவில்லை?
ஆகம விதிகளுடைய பாடல் பெற்ற கோயில்களில் இவர்களைப் பணி நியமனம் செய்ய விடாமல் தடுப்பது யார்? இந்துக்களின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏன் இதற்காகச் சிறிதும் குரல் கொடுக்க முன்வருவதில்லை? பயிற்சிபெற்ற 206 பேரில், இரண்டு பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 204 பேரையும் விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆண்களைப் போன்று பெண்களும் அர்ச்சகராக வேண்டும். அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்திய அரசியல் சாசனம் தீண்டாமை எந்த வடிவத்தில் வந்தாலும், அது களையப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தினாலும்கூட நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதே சமூக நீதியை நிலைநாட்ட விரும்பும் அனைவரின் கருத்தாக உள்ளது. இதே கருத்தை வழிமொழிகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன். “அர்ச்சகர் பயிற்சி முடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணி நியமனமே நடைபெறுகிறது.
பிரமணர் அல்லாத அர்ச்சகர்களுக்கு நடைபெறும் நவீன தீண்டாமை
அதிலும், குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்கள், ஸ்ரீரங்கம் சென்னை கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் இவர்களுக்குப் பணி நியமனம் தர மறுப்பது ஏன்? தனிக்குவளை, தனிச் சுடுகாடு போல அர்ச்சகர் பயிற்சிபெற்ற பிற சாதி மாணவர்களுக்கு ஏன் இதுபோன்ற தனி நியமனம் நடைபெறுகிறது? பரம்பரை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக சேஷம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஆனால், இதனைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பிராமணர்கள் பரம்பரை பரம்பரையாகத் தங்களது வாரிசுகளை அர்ச்சகராக நியமிக்கிறார்கள்.
இது சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறும் செயல். இதனை ஏன் அரசு கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற பிரச்னைகளைக் களைந்து, பெரிய கோயில்களிலும் பிராமணர் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்கிறார் வாஞ்சிநாதன்.
தன்னைப் போல பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற 204 பேருக்கும் அர்ச்சர்கர் பணி நியமனம் அளிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறார், பிராமணர் அல்லாத அர்ச்சகர் மாரிச்சாமி. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
முள்ளைப் பிடுங்கியும் ஆறாத காயம்
இந்தியாவிலேயே, சமூக நீதிக்கு முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி உரிய நீதியைப் பெற்ற பின்னரும்கூட, பிராமணர் அல்லாதோர் கருவறைக்குள் அர்ச்சகர்களாக நுழைவது இன்றைக்கும் சவாலாக இருப்பது வேதனைக்குரியது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை ’நீதி தவறாமல்’ நிறைவேற்றுவதே அரசின் தலையாயக் கடமை.
பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளைப் பிடுங்கிவிட்டாலும், அந்த முள் குத்திய இடத்தில் உண்டான காயத்தை இன்னும் நாம் ஆற்றவில்லை என்றே தோன்றுகிறது. ஆகவே, இந்தக் காயத்தை ஆற்ற நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நாம் வலியுறுத்துவதே காலத்தின் கட்டாயம்!