மதுரை மாவட்டம் கே.கே., நகரில் உள்ள சோகோ அறக்கட்டளை வளாகத்தில், தமிழ்நாடு MBC பட்டியலில் உள்ள சிறு-குறு சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதன் மாநிலத் தலைவர் மணி பாபா செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.23) இட ஒதுக்கீடு கேட்டு பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில் உள்ள கோனார்(யாதவர்), நாடார், செட்டியார், பிள்ளைமார், அகமுடையார், மறவர், கள்ளர் சமூகங்கள் போராடி வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ள வன்னியர் சமூக மக்களுக்கு தனியாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கங்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். MBC பட்டியலில் உள்ள வலையர், பிரன்மலைக்கள்ளர், மறவர் இட ஒதுக்கிடு கேட்டும் போராடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு மிகவும் (MBC) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறுகுறு சமூகங்களான வண்ணார், மருத்துவர் (நாவிதர்), குலாளர், இசை வெள்ளாளர், ஆண்டிபண்டாரம், யோகிஸ்வரர், ஒட்டர், போயர் போன்ற சமூகங்களில் 20 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சலவைத் தொழிலும், துணி தேய்க்கும் தொழில் செய்யும் வண்ணார் சமூக மக்கள், முடி திருத்தும் தொழில் செய்யும் மருத்துவர் (நாவிதர்) சமூகம், மண்பாண்டம் தொழில் செய்து வரும் குலாளர் சமூகம், கல் உடைக்கும் தொழில் செய்யும் ஒட்டர், போயர் சமூகம், கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வெள்ளாளர், கிராம கோவில் பூசாரி, பூக்கட்டும் தொழில் செய்யும் ஆண்டிபண்டாரம், யோகீஸ்வரர் சமூகங்கள் கல்வி, வேலை, வாய்ப்புகளில் முழுமையாக இட ஒதுக்கீடு பெற முடியாமல் MBC பட்டியலில் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பழங்குடியினருக்கு (ST) 1 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோருக்கு (SC) 18 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 30 விழுக்காடு என மொத்தம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறார்கள்.