மொட்டை மாடியில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு மதுரை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17ஆம் தேதி இரவு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த ரயில் பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், தொடர் மழையால் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததை அடுத்து ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகளில் சுமார் 800 பயணிகள் வரை சென்றதாகக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தைச் சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்து சுமார் 10 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையும் நீடித்து வருகிறது. இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர். இதனிடையே, இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், மீதமுள்ள பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரயில் நிலையத்தில் சிக்கியவர்களை மீட்க, இன்று காலை மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதில், சுமார் 36 மணி நேரமாக ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் அதே ஹெலிகாப்டரில், முதற்கட்டமாக மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
மேலும், தேசிய பாதுகாப்புப் படையினர், ரயிலில் இருந்த 200 பயணிகளை நடைப்பயணமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து வாகனம் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியும், உணவுப் பொருட்கள் வழங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு வீட்டின் மாடியில் இருந்து, கர்ப்பிணி பெண் இருப்பதாகவும், மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து ராணுவத்தினர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மருத்துவச் சிகிச்சைக்காகக் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்பாக ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மதுரை விமான நிலையத்திலிருந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து கர்ப்பிணிப் பெண்ணின் தாயார் அளித்த பேட்டியில், “எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், என் மகளுக்கு வலி ஏற்பட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
ஆகையால் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அழைத்து வந்தோம். ஆனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்ததால், மருத்துவமனைக்குப் போக முடியவில்லை. அதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்த உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் இரண்டு மாடி வரை தண்ணீர் புகுந்ததால், 3 நாட்களாக மொட்டை மாடியில் குடையைப் பிடித்துக் கொண்டு உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்.
நல்லவேளையாக ஹெலிகாப்டர் வந்தது. அப்போது ஒரு அட்டையில் உதவி தேவை என்று எழுதி, ராணுவத்தினரை உதவிக்கு அழைத்தோம். அதன்படி ராணுவத்தினர் வந்து, எங்களையும், என் கர்ப்பிணி மகளையும் பாதுகாப்பாகக் காப்பாற்றினர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம், மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது என் மகள் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிக் கொண்ட 800 பயணிகளின் கதி என்ன? - 3வது நாளாக உணவின்றி தவிப்பு!