மதுரை : இந்தியில் தேர்வு எழுதுவோருக்கும் பிற மொழி தேர்வர்களுக்கும் சிஎம்ஏ தேர்வுகளில் அப்பட்டமான பாரபட்சம் பின்பற்றப்படுகிறது. இந்த அநீதியான விதிமுறைகளை அகற்ற வேண்டுமென சு. வெங்கடேசன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "CMA (Inter) தேர்வுகளில் பாரபட்சம் இருக்கிறது. இது குறித்து (Institute of Cost Accountants of India) இந்திய செலவு கணக்காளர்கள் கல்லூரி நிர்வாகத் தலைவர் பி. ராஜு ஐயர், துணைத் தலைவர் விஜேந்தர் சர்மா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் சாரம் இது.
இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்
"மேற்கண்ட தேர்வை எழுதுகிறவர்கள், தேர்வர்களின் பெற்றோர்கள் அணுகித் தேர்வு முறைமையில் உள்ள பாரபட்சத்தைக் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். நானும் அந்தத் தேர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைப் பார்த்தேன். அப்பட்டமான பாரபட்சம் அதில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த அறிவிக்கையின் 13ஆவது அம்சம் 'இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்துப்பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்' என்று அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியல்லாத மொழித் தேர்வர்கள் அதாவது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்கள் கணினி தட்டச்சு வாயிலாக விளக்க முறைசார் கேள்விகளுக்கு விடைகள் தர வேண்டும். இதில் முன்னர் 40/100 மதிப்பெண்கள் மட்டுமே தரப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு தற்போது 60/100 என விளக்க முறை கேள்விகளுக்கான மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன.