தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழாய் மூலம் எடப்பாடிக்கு காவிரி நீர் வழக்கு - தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் - பி.ஆர். பாண்டியன்

மதுரை: காவிரியின் நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்யக் கோரிய வழக்கில், மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது என தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PR Pandian petition to Madurai Court
PR Pandian petition to Madurai Court

By

Published : Aug 4, 2020, 7:22 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரைக் கொண்டு பாசன வசதி பெறுகின்றன. உச்ச நீதிமன்றம் 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரில், உபரி நீரை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டு செல்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையைச் செய்யும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சிறப்பு செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில் நான்கு தாலுகா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீராக 0.555 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

இது தீர்ப்பாயத்தின் உத்தரவில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இது எவ்விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது எனக் கூறியிருந்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details