மதுரையில் நேற்று மாலை திடீரென சூறாவளிக் காற்று ஏற்பட்டு கனமழை பெய்ததால், மாநகர் பகுதியின் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. அதன் ஒரு பகுதியாக அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டடம் முழுவதும் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ரவிச்சந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய மூன்று நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் விசாரணை மேற்கொண்டார்.
மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் மின் துாக்கியிலும் (லிப்ட்) நோயாளிகள் மாட்டிக்கொண்டதால், அரை மணி நேரம் போராடி ஊழியர்கள் இருவரை மீட்டனர்.
அரசு மருத்துவமனையில் மின்தடை-3பேர் பலி இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில், 'புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இறந்த மூன்று பேரும் ஒரே நேரம் இறக்கவில்லை, அடுத்தடுத்து இறந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டபோது யாருடைய சுவாசமும் நிற்கவில்லை. கருவிகள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருந்தன என விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று பேர் இறந்தது இயற்கையாகவே நடந்தது. மின்சாரம் தடைபட்டதால் அவர்கள் இறக்கவில்லை' எனத் தெரிவித்தனர்.