மதுரை: நிலையற்ற வருவாய், நம்பகத்தன்மையற்ற சூழல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் இந்திய வேளாண் எதிர்காலம் கேள்விக்குறியாகிவரும் நிலையில், அதனை நம்பி வாழும் கோடிக்கணக்கான விவசாயிகள், உழவுத்தொழிலை விட்டே வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறு, குறு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது.
இதனால், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்ற நிலையில், சாதாரண பொதுமக்கள் வெறும் நுகர்வோராக மட்டுமே இருக்க முடியும் என்பதால், சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்தும் தள்ளாட்டத்தில் இருக்க வேண்டிய யதார்த்த நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.
பொதிகைச்சோலை: ஆனால், இதற்கு நேர்மாறாக இயற்கை வேளாண்மையின் மீது அக்கறை கொண்ட எவரும் விவசாயத்தில் இறங்கி சாதிக்க முடியும் என்பதை 'பொதிகைச் சோலை (Promoting Organization for Tamil Heritage Inhabitant and Green Advancement Initiatives - POTHIGAI) ' என்ற அமைப்பு நிரூபித்துக் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கூட்டுறவுப் பண்ணைய முறையை ஊக்குவித்து வரும் பொதிகைச்சோலை, ஆர்வம் காட்டி வரும் இளைய தலைமுறையினருக்கும் பயிற்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சற்றேறக்குறைய 103 ஏக்கர் நிலத்தில் ’பொதிகைச்சோலை’ உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் சந்தை விலைக்கேற்ப நிறைவான விலையில் ஒருவருக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலங்களை வாங்கி, அவரவர் பெயரில் கூட்டுப்பட்டா தயாரிக்கப்பட்டு,
அதில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு அவர்களே நுகர்வோராகவும், எஞ்சியுள்ளவற்றை வெளிச்சந்தையில் விற்று அதன் வருமானமும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில், தலைவர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பொதிகைச்சோலை கூட்டுறவு சங்கத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பின் மூலமாக இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகள் மட்டுமன்றி, சூழல் சுற்றுலாக்களும் நடத்தப்படுகின்றன.
அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து: தற்போது 60 நாள் 'திணையியல்' பயிற்சியில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரியான முரளி கிருஷ்ணன் கூறுகையில்,
'வாழ்வின் நிரந்தரம் எது என்ற தேடலில் நான் ஈடுபட்டபோது, விவசாயம்தான் நமக்கான வாழ்வியல் மற்றும் எதிர்காலம் என்பதை முடிவு செய்து, வேளாண் அறிஞர் பாமயனின் பேச்சுகளால் கவரப்பட்டு, இங்கு பயிற்சிக்கு வந்தேன். இங்கு வந்த பிறகுதான் வேளாண்மை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
வேளாண்மையை ஒரு வாழ்வியலாக உணர்ந்து கொள்வதற்கு இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்ததை என்னால் உணர முடிந்தது. உணவுமுறை மட்டுமன்றி பழக்கவழக்கத்திலும் எங்களுக்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது' என்கிறார்.
சங்கத் தமிழ் இலக்கியங்கள் கூறும் வேளாண்மை குறித்த அனைத்துவிதமான கூறுகளும் இங்கே கற்றுத்தரப்படுகின்றன. எளிமையான, ஆடம்பர நுகர்வு அற்ற வாழ்க்கை முறையே இங்கு கற்றுத் தரப்படும் பயிற்சியின் மையப்பொருளாக அமைந்துள்ளது. அதிகாலை எழுவது முதல், இரவு படுக்கைக்குச்செல்வது வரை பல்வேறு வகையான செயல்பாட்டுப் பயிற்சிகளே பொதிகைச்சோலையில் அதிகம்.
சென்னையைச் சேர்ந்த மற்றொரு ஐடி ஊழியர் அமலா கூறுகையில், 'நகர வாழ்க்கையும், நாம் சேமித்து வைத்துள்ள பணமும் மட்டுமே நமக்கான நிம்மதியைத் தராது என்பதை உணர்ந்தே, இந்தப் பயிற்சிக்கு வருகை தந்தேன். நாம் உருவாக்குகின்ற எதுவும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை இங்கு வந்த பின்னர்தான் என்னால் உணர முடிந்தது. இங்கு பயிலும்போதும், பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களோடு உரையாடும்போதும் வேளாண்மை குறித்து எங்களுக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்தது.