மதுரையைச் சேர்ந்த பெரியகருப்பன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற பொதுத்துறை நிறுவனம், ஆவின். அதன் மதுரை பிரிவில் நான் உட்பட 17 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டோம். இந்நிலையில், ஒருங்கிணைந்த மதுரை ஆவினிலிருந்து நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு அரசால் தேனி மாவட்ட ஆவின் என தனியாக பிரிக்கப்பட்டது.
மதுரை ஆவினுக்கு தேர்தல் நடத்தாமல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரை ஆவினுக்கு உட்பட்ட 11 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக அவர் இல்லை. வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை. இருப்பினும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவரது நியமனத்தை நீக்கம் செய்து, தேர்தல் நடத்தி நிர்வாகக் குழுவை தேர்வு செய்யவும், அதுவரை ஆவின் நிர்வாகத்தை பொதுமேலாளர் கவனிப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை ஆவினில் ஏற்கனவே நான் உட்பட 11 இயக்குநர்கள் உள்ளோம். எங்கள் பதவி காலம் 2023ஆம் ஆண்டில்தான் முடிகிறது. இதனால் மதுரை ஆவினில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளுக்குதான் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்.