காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் - காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் ரத்து செய்ய கோரிக்கை
மதுரை: திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி வியாபாரிகளும் பொதுமக்களும் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக மதனகலா பணிபுரிந்துவருகிறார். இவர் கரோனா காலத்தில் மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊரடங்கு காலத்தில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உணவில்லாமல் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை தேனி மாவட்டம் போடிக்கு இடமாற்றம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை அடுத்து மதனகலாவை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் போஸ்டர் ஒட்டி மாநகர காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மதனகலாவை காவல் ஆய்வாளராகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து, சட்டம் ஒழுங்கை மனிதாபிமானத்தோடு காத்துவந்ததால் அவரை இடமாற்றம் செய்வதை ரத்துசெய்ய வேண்டும் என போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.