மதுரை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வில் தவறான வினா - விடை இடம் பெற்றதாக சிலர் கடந்த 2017ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தாரணி என்பவரின் மனுவையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதை அடுத்து, அவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான முந்தைய உத்தரவு, மனுதாரருக்கும் பொருந்தும். ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தனக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத்தாக்கல் செய்து உள்ளார்.