மதுரை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருக்கும் கோயில்களில் சித்திரை, வைகாசி திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
அதேநேரம், கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரக் கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.