மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை வண்டியூர் அருகே சென்னை-கன்னியாகுமரி சாலையில் உள்ள திடலில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சட்டப்பேரவை தேர்தலில் வென்று விடலாம் என அதிமுக நினைக்கிறது. பொய்யான விளம்பரம் மூலமாக தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அதிமுக நினைக்கிறது. வகுப்புவாத சக்திகள் தலை தூக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் கட்சிகள் ஆட்சியில் இருக்க கூடாது" என்றார்.
இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மகேந்திரன் பேசுகையில், "தமிழ்நாட்டை ஆளும் அதிமுக சமூகநீதி கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கிறது" என்றார். அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், "இந்தியாவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற இந்த முழக்கம் வெல்ல வேண்டும்" என்றார்.
தா.பாண்டியன் பேசும்போது, "அதிமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலோடு வழி அனுப்ப வேண்டியது மிக மிக அவசியம். நாடாளுமன்றத்தில் எந்தவித தீர்மானமும் இயற்றாமல் ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியை சுரண்டியவர்களின் ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. ஆகையால் இருவரையும் சேர்த்து துரத்தியடிக்க வேண்டும்" என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா பேசுகையில், "மதவெறி அரசியல் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவின் மதச் சார்பின்மையை ஒழிக்க நினைக்கிறது. அதன் கருவியாக பாஜக செயல்படுகிறது. இந்திய நாட்டின் அனைத்து வளங்களையும் உற்பத்திகளையும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதையே தனது பணியாகக் கொண்டு செயல்படுகிறார் இந்திய பிரதமர் மோடி. இதன் தொடர்ச்சியாகவே பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்படுகிறது.
விவசாயிகள் போராடுவது குறித்து மோடி அரசு சிறிதும் கவலைப்படவில்லை. பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் இந்திய உணவு இறையாண்மைக்கு எதிரானது. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜகவின் எடுபிடி அரசாக விளங்குகிறது. தொடர்ந்து மத்திய பாஜக சமூக நீதிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை பல்வேறு வடிவங்களில் நடத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக அதிமுக நாடாளுமன்றத்தில் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்றார்.