தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்.. இரண்டு பெண்களுக்கு வார்னிங்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 பெண் பொறியாளர்கள் அனுமதியின்றி இயக்கிய ட்ரோன் கோபுரத்தில் இடித்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Meenakshi Amman temple
மதுரை மீனாட்சி கோயில்

By

Published : Jun 23, 2023, 8:06 AM IST

மதுரை: நவீன ட்ரோன் கேமராக்கள் தற்போது பல்வேறு இடங்களிலும் புழக்கத்தில் வந்துள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளில் காவல் துறையின் முறையான அனுமதி பெற்ற பிறகே அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேவையின்றி சிலர் இயக்குகின்ற ட்ரோன் கேமராக்களால் அவ்வப்போது சில சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எந்த விதமான பொருட்களுக்கும் அனுமதி இல்லை என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் டோக்கன் கவுண்டர்கள் மற்றும் தரிசன கூட்ட நெரிசலில் அதிக நேரம் காத்திருப்பது போன்ற சிரமங்களை முன்வைத்தனர். இதனால் பொதுமக்களின் வரவு குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி போன்றவற்றிற்கு செல்லும்போது ஜாமர் இருப்பதால் செல்போன் சிக்னல் கிடைக்காது.

ஆகையால், செல்போன் எடுத்துச் செல்வதால் தரிசனத்திற்கு எந்த இடையூறும் இருப்பதில்லை எனவும், பக்தர்கள் பல அடுக்கு சோதனைக்குப் பிறகே கோயிலில் நுழைய அனுமதிக்கப்படுவதால் செல்போன் எடுத்துச் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின் மேற்பரப்பில் ட்ரோன்கள் இயக்குவதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை மாநகர காவல் துறையிலும், கோயில் நிர்வாகத்தில் முறையான அனுமதி பெற்ற பிறகே அப்பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்த அனுமதி உண்டு. இந்த நிலையில், நேற்று மதியம் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண் பொறியாளர்கள் மீனாட்சி அம்மன் கோயிலின் அருகே அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தவாறே அங்கிருந்தபடி ட்ரோன் கேமராவை இயக்கி உள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ட்ரோன் கோபுரத்தின் அருகே சென்று மோதி கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இதனையடுத்து கோபுரத்தின் அருகே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண்கள் இருவரும் தாங்கள் சுற்றுலா வந்துள்ளவர்கள் எனவும், இப்பகுதியில் ட்ரோன் இயக்க தடை இருப்பது தங்களுக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளனர்.

மேலும், தங்கள் ட்ரோனை முதல் முறையாக இயக்க முற்பட்டபோது இது போன்று கோபுரத்தில் இடித்து விழுந்து நொறுங்கியதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரிடமும் கையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களைச் சோதனையிட்ட காவல் துறையினர் உரிய விசாரணைக்கு பின்னர் கடிதம் எழுதி வாங்கிவிட்டு, 2 பெண் பொறியாளர்களையும் அறிவுரை கூறி விடுவித்தனர்.

இதையும் படிங்க: மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது நோயாளி மரணம்: டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details