மதுரை:கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சந்தேகத்தின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறையினரால் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக நடைபெற்ற வழக்கில் ரூபாய் 20 லட்சம் நிவாரணமாக உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ள வழக்குதாரர் சுப்பிரமணியமும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனும் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஹென்றி டிபேன், காவல் சித்திரவதை தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் இல்லை. ஐ.நாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் காவல்துறை சித்திரவதை தொடர்பாக இந்தியா கையொப்பமிட்டுள்ளது. ஆனால் இதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற ஒரு கொடூரமான சித்திரவதை சம்பவத்தில் சுப்பிரமணியம் என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
இது தற்போது ஓய்வு பெற்ற சில மூத்த அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்ற சம்பவமாகும். அச்சம்பவம் குறித்து தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கொண்டு சென்று எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில், கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்திற்கு ரூபாய் 20 லட்சம் நஷ்டஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது நிச்சயம் சரியான தீர்ப்பு. இந்த வழக்கைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்தைச் சந்திப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காவல்துறை அதிகாரிகளே பாதிக்கப்பட்ட நபரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, செலவு செய்து பாதுகாப்பாக அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்கள்.