சமூகத்தில் பதற்றத்தையும் நல்லெண்ணத்தையும் கேள்விக்குறியாக்கும் டிக்டாக், பிராங்க் ஷோக்களுக்கு காவல்துறை கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்து, தடையாணைப் பெற்ற வழக்கறிஞர் நீலமேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'மதுரையில் இருப்போர் அனைவரும் குடிகாரர்கள் என்று பொருள்படும் விதமாக 'பிராங்க் ஷோ' நடத்தி, அதனை டிக்டாக் செயலியிலும் பகிர்ந்துள்ள இளைஞர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களில் பல தரப்பினரும் வெறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.
டிக்டாக் செயலி, பிராங்க் ஷோக்களை தடை விதிக்க வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தடையாணைப் பெற்றுள்ள வழக்கறிஞர் நீலமேகம், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,
"மதுரையின் வரலாறு, புராணப் பெருமைகளை மறைக்கும் விதமாக சமூக வலைதளங்களிலும் திரைப்படங்களிலும் எதிர் மறைக் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார், டிக்டாக் செயலி, பிராங்க் ஷோக்களை தடைவிதிக்க வலியுறுத்தி வழக்குத் தொடுத்திருந்தார். இதனால் கலாசார சீர்கேடு மட்டுமன்றி, மாணவர்கள் மத்தியில் தவறான பழக்கவழக்கங்கள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் இவற்றைத் தடை செய்து முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியிருந்தனர்.