மதுரை அருகே பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை. இவர் அனுப்பானடி மின்வாரிய கட்டுப்பாட்டு அறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினார். அங்கே அறையில் தங்கி வேலை பார்த்த நிலையில், இன்று (ஜனவரி 23) காலை மின்வாரிய கட்டுப்பாட்டு அறைக்குள் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தூய்மைப் பணியாளர் படுகொலை - போலீசார் விசாரணை - மதுரை படுகொலை
மதுரை: சிந்தாமணி அருகே தூய்மைப் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அலுவலகம் வந்த மின்வாரிய ஊழியர்கள் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த அழுகுமலையின் உடலை பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அழகுமலையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த கொலை குறித்து அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், வழக்கமாக மின்வாரிய அலுவலகம் அருகே இளைஞர்கள் கூடி மது அருந்துவது மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.