தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணுக்கு மிரட்டல்: காவல் துறைக்கு நீதிமன்றம் அறிவுரை!

மதுரை: தனது கணவர் மீது பொய் வழக்குப் போடுவதாக தன்னை காவல் துறையினர் மிரட்டுவதாகப் பெண் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை

By

Published : Oct 23, 2020, 3:41 PM IST

மதுரையைச் சேர்ந்த யாஸ்மின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2017ஆம் ஆண்டு எனது கணவர் ராஜா உசேன் வழக்கு ஒன்றில், 23 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் எனது கணவர் மீது பொய் வழக்குப் பதியப்பட்டு பிறகு பிணையில் வெளியே வந்தார். காவல் நிலையத்தில் எனது கணவர், மகனைத் துன்புறுத்தியதில் கை கால்களில் காயங்கள் இருந்தன.

இதுதொடர்பாக, மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். தொடர்ந்து, மதுரைச் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் எனது கணவருக்கு ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பினார். இந்நிலையில், காவல் துறையினர் எனது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று எனது கணவரை எவ்வித அனுமதி கடிதம் இன்றி தேடிவந்துள்ளனர்.

எனது கணவரை மீண்டும் சிறையில் அடைக்க காவல் துறையினர் பலவகையில் முயற்சி செய்துவருகின்றனர். எனது கணவர் காவல் நிலையத்துக்கு நேரில் விளக்கம் அளிக்கச் சென்றபோது, அவரை காவலர்கள் மிக தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.

மேலும், கண்டிப்பாக மறுபடியும் சிறையில் அடைப்போம் என மிரட்டுகின்றனர். இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதையும் மீறி மீண்டும் காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து கணவரைக் கண்டிப்பாகச் சிறையில் அடைப்போம் என என்னை மிரட்டினர். என்னை மிரட்டிய காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எனது கணவரின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்க, உயர் அலுவலர்களுக்கு மனு அனுப்பி உள்ளேன்.

எனவே, என்னையும், எனது கணவரையும், உறவினர்களையும் மிரட்டி, என் கணவரை மீண்டும் சிறையில் அடைப்பேன் எனக் கூறிவரும் காவல் துறை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மதுரை மாநகர காவல் துணை ஆணையர், காவல் ஆய்வாளருக்கு மனுதாரரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.

ABOUT THE AUTHOR

...view details