மதுரை:சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில் கரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:விமான நிலைய ஊழியர் கொடூர கொலை - நீதிமன்றத்தில் காவல்துறை கூறிய பகீர் தகவல்!
அங்கு வைத்து போலீஸார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், நட்சத்திர சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:சொந்த ஊர் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கும் மலேசிய தொழிலதிபர்; வெளிநாடு போல ஜொலிக்க போகும் பூலாம்பாடி கிராமம்...