மதுரை தேனி. மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் கஞ்சா கடத்தியதாக கடந்த மாதம் மூன்று வழக்குகளில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மற்றும் அவர்களுடைய உறவினர்களின் வீடு, நிலம், வாகனங்கள். வங்கியிலுள்ள பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இவ்வாறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் கஞ்சா வியாபாரிகள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டத்தில் முதல்முறையாக போதைப்பொருள் கடத்திய வழக்கில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே இருக்கக்கூடிய கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 22 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் பொழுது மிகவும் கவனமாக மூத்த அதிகாரி தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறினார்.
இதையும் படிங்க: சைபர் கிரைம் கிரிமினல்களின் புதிய மோசடிகள் என்னென்ன? சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் எச்சரிக்கை