லத்தியால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவலர் பணியிடை நீக்கம்!
மதுரை: வாகன சோதனையின்போது லத்தியால் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகக் காவலர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா குமார் என்பவர் கடந்த 15 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாகன சோதனையில் ஈடுபட்ட டெல்டா என்னும் சிறப்புக் காவல் துறையினர் லத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து நாட்களாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து மதுரை மாநகர் காவல் துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திலகர் திடல் காவல் நிலையத்தின் முதன்மைக் காவலர் ரமேஷ் பாபு என்பவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.