மதுரை:கரூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது," போக்குவரத்து சந்திப்புகளில் ஒரு பத்து நிமிடம் போக்குவரத்து காவலர் இல்லாமல் இருந்தால் அங்கு நிலைமை என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சமூகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதும் தெரிந்தது தான்.
24 மணி நேரமும் பணி
மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய போலீஸாரின் சேவை அவசியமானது. குற்றங்கள் அதிகரிக்கும் சூழலில் போலீஸாரின் பணி முக்கியமானதாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸாருக்கு தமிழ்நாட்டில் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. போலீஸாரின் தேவை அவசியமாக இருக்கும் போது அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும்.
போலீஸாருக்கு சங்கம் வைக்க அனுமதி இல்லாத சூழலில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வலுவான தீர்வு முறை தேவை. போலீஸார் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்றால் முறையாக பதவி உயர்வு, பிற சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் பதவி உயர்வு, சலுகைகளுக்காக அவர்கள் நீதிமன்றம் வரவேண்டிய தேவை இருக்காது.
அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது. போலீஸார் ஒருநாள் விடுமுறை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தை கவனிக்காமல் ஒருநாள் கூட விடுமுறையில்லாமல் 24 மணி நேரமும் அவர்கள் பணிபுரிகின்றனர். இதுவே, போலீஸார் சில நேரங்களில் கோபத்துடன் பணிபுரிய காரணமாக உள்ளது.
2020யில் 25 பேர் தற்கொலை
கடந்த பத்து ஆண்டுகளில் காவல்துறை பணியிலிருந்து 6,823 பேர் விலகியுள்ளனர். வேலை கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில் காவல்துறை பணியிலிருந்து விலகுகிறார்கள் என்றால் வேலைபளு, மனஅழுத்தம், மன உளைச்சல் இருப்பது நிரூபணமாகிறது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையில் மனஅழுத்தம், மனஉளைச்சல் மற்றும் பிற காரணங்களால் 2011 ஆம் ஆண்டு 31 பேரும், 2020 ஆம் ஆண்டு 25 பேரும் தற்கொலை செய்துள்ளனர். உடல் நலக்குறைவால் 2011இல் 217 பேரும், 2020இல் 200 பேரும் உயிரிழந்துள்ளனர். இது போலீஸார் உடல்நலனில் அக்கறையில்லாமல் இருப்பதை காட்டுகிறது. அவர்களின் உடல்நலனை மேம்படுத்த மருத்துவ விடுப்பு, உரிய சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்கள் அதிகரிப்பு
காவலர் முதல் சிறப்பு காவல் ஆய்வாளர் வரை 16 விழுக்காடு பணியிடங்கள், அதாவது 15,819 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பவும், எதிர்காலத்தில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.