வழக்கறிஞரை தாக்கிய காவல்துறை: உள்துறை செயலாளர் - டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு
மதுரை: வழக்கறிஞரை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த கலந்தர்ஆஷிக் அகமது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம் தொண்டியில் போலி டாக்டர் ராஜலட்சுமியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தொண்டி DSP புகழேந்தி கணேசுக்கு எதிராக நான் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததால், என்னை பழிவாங்க காவல் துறையினர் முடிவு செய்தனர்.
இதனால் போலி டாக்டருக்கு உதவியதாக அந்த வழக்கில் என்னையும் சேர்த்தனர். என் மீது பொய் புகாரில் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் துறையினர் மிரட்டல் விடுக்கின்றனர் என மாஜிஸ்திரேட்டிடம் புகார் செய்தேன்.
பின்னர் “கோர்ட்டில் என்னை பற்றி புகார் செய்கிறாயா? நீ வெளியே வந்த உடன், உன் குடும்பத்தை நாசம் செய்கிறேன்“ என டி.எஸ்.பி. மிரட்டினார்.
பின்னர் பிணையில் வெளியே வந்து, மனித உரிமை கமிஷனில் புகார் செய்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், சப்இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட காவல் துறையினர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி என் வீட்டுக்கு வந்து, என்னை தாக்கி, காவல் துறையினர் தங்கும் அறைக்கு என்னை கொண்டு சென்று அடைத்து தாக்கியதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது பொய் வழக்குபதிவு செய்து, தாக்கிய டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மீதும், அவருக்கு துணையாக இருந்து என்னை துன்புறுத்திய சப்இன்ஸ்பெக்டர்கள் சரவணன், முருகானந்தம் உள்ளிட்ட 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.