குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களது மகள் மாயமானது குறித்து பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கண்டுபிடித்து, இளைஞரைக் கைதுசெய்து, அந்தச் சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர்களிடம் மீட்கப்பட்ட சிறுமியை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது, விசாரணை செய்த அலுவலர்களுக்கு சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.அந்த வாக்குமூலத்தில், 2017ஆம் ஆண்டு முதல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட சில அதிமுக நிர்வாகிகள் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமி தரப்பில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளிக்கபட்டது. புகாரின் பேரில் விசாரித்த மகளிர் காவல் துறையினர் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த தகவலை அறிந்து தலைமறைவான நாஞ்சில் முருகேசனை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள கோயில் நிர்வாகி ஒருவர் வீட்டில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்," 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படாமல் தற்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் கொண்டு புனையப்பட்ட வழக்காகவே கருதப்பட வேண்டும். இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிணை வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.