பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர விசாரணை நடந்தது. இதில் தகுதியில்லாத பலருக்கு முறைகேடாகப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து மோசடி நடந்திருப்பது அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பணம் பறிமுதல் செய்வதும், மோசடியில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்புக் குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை 6 ஆயிரத்து 712பேரிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் திரும்பப் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.