தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு தடை; கலெக்டரின் மேல்முறையீட்டில் நீதிபதிகள் உத்தரவு!

Plaster of Paris vinayakar idols prohibited: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதற்கு நேற்று மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி அளித்த நிலையில், இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

Plaster of Paris vinayakar idols prohibited high court Judges order in Tirunelveli Collector appeal
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு தடை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 9:05 PM IST

மதுரை:ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் என்பவர், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது நிறுவனம் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை காவல் துறையினர் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர். அந்த தடை உத்தரவை ரத்து செய்து, தனது விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்” என நேற்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனைக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், இந்த மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறி நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது எனக்கூறி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், “நேற்றைய வழக்கில் நீதிபதி பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது எனக்கூறி, விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதில் விநாயகர் சிலைகள் இயற்கையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய நச்சு வேதிப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற மூலப் பொருட்கள் கலந்து செய்வதற்கே அனுமதி இல்லை என தெளிவாக கூறியுள்ளது.

மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு விநாயகர் சிலைகளை செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலை தயாரிக்கக் கூடிய நிறுவனம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி பெறும்போது எத்தனை சிலைகள் தயாரிக்கப்படுகிறதோ, அத்தனை சிலைகளுக்கான வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறி நச்சுப் பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால், வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும். தயாரிப்பதற்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என விதிகள் உள்ளது. இந்த மனுதாரர் எவ்வித உரிமமும் பெறவில்லை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் வழிமுறைகளை மனுதாரர் முற்றிலும் மீறி, சிலைகள் தயாரித்துள்ளது தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு எடுத்தனர். அரசு தரப்பில், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகினார். அப்போது, “மத்திய அரசின் மாசுக் கட்டுபாட்டு வாரிய விதிமுறைகளுக்கு எதிராக மனுதாரர் விநாயகர் சிலை தயாரித்துள்ளார்.

மேலும், அவர் சிலைகள் தயாரிப்பதற்கு எந்த வித அனுமதியையும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கவில்லை. இது முற்றிலும் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது” என அவர் வாதாடினார். இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஏன் பின்பற்றுவதில்லை என கேள்வி எழுப்பினர்.

மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சுப் பொருட்கள் கலந்த சிலைகளை செய்யக்கூடாது என உத்தரவு உள்ளது, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையே எனவும் கேள்வி எழுப்பினர். ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் புற்றுநோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை. எல்லாமே விஷம் தான் என்றும், அமோனியம், மெர்க்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிசும் ஒரு நச்சுப் பொருள்தான் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு நேற்று தனி நீதிபதி அளித்த நிலையில், இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்... அரசியலும், ஆன்மிகமும்!

ABOUT THE AUTHOR

...view details