மதுரை குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை நேற்று நள்ளிரவு வேனில் வந்த 4 பேர் தங்களை காவலர்கள் எனக்கூறி வண்டி பதிவுஎண் இல்லாத காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞனின் உறவினர்கள் கிராம மக்கள் உதவியோடு அந்த வாகனத்தை விரட்டிச் சென்று சூர்யா நகர் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் ஆய்வாளர் வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த தனிப்படை காவலர்கள் என்றும் ஒரு வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த குலமங்குலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கைது செய்ய வந்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களது அடையாள அட்டையை பரிசோதனை செய்ததில் உண்மையான காவலர்கள் என்பதும் தெரியவந்தது.