தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. இதனையொட்டி மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சியினர் பேரணி உள்ளிட்டவை நடத்த தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை: அரசியல் பேரணிக்கு தடை விதிக்க கோரி மனு! - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை: கரோனா இரண்டாம் அலை பரவுவதால் அரசியல் கட்சியினர் பேரணி உள்ளிட்டவை நடத்த தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் தற்போது கரோனாவின் இரண்டாம் அலை பரவிவருகிறது. இந்த சூழலில் அதிக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் எவ்வித பயனுமில்லை. ஆகவே, கரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், அரசியல் கட்சியினர் பேரணி, கூட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.