மதுரை:பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தைக் கடந்த அதிமுக ஆட்சியில், அலுவலர்கள் துணையோடு அதிமுகவைச் சேர்ந்த அன்னபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முறைகேடாக குவாரி நடத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடி நடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த வாரம் அதிமுகவைச் சேர்ந்த அன்னபிரகாஷ்
குடும்பத்தினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க அன்னப்பிரகாஷ் மகள்கள் சிவனேஸ்வரி, ஜெயா, மற்றும் ஜெயபிரகாஷ் பாண்டி, லதா, பாப்பம்மாள் உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.