தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன உயிர்களைப் பாதுகாக்க தடய அறிவியல் துறை அலுவலகம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - Madurai news

மதுரை : வன உயிர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உதவும் தடய அறிவியல் துறை அலுவலகத்தை தமிழ்நாட்டில் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Oct 7, 2020, 8:25 PM IST

மதுரை, அதலையைச் சேர்ந்த வழக்கறிஞர் புஷ்பவனம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ”இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் வன உயிர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அரிய வகை விலங்கினங்கள் பல உள்ளன. ஆனால் அவற்றைப் பலர் வேட்டையாடி அழித்து வருகின்றனர். மேலும், வன விலங்குகளிலிருந்து கிடைக்கும் பொருள்களான புலித் தோல், தந்தம் உள்ளிட்டவை போன்று போலியாக பொருள்கள் தயாரித்து விற்றும் வருகின்றனர்.

இது போன்ற குற்றங்களில் உண்மைத் தன்மையை அறிய உதவும் தடய அறிவியல் துறை டேராடூன், ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடக்கும் இத்தகைய குற்றங்களின் உண்மைத் தன்மையை அறியவும், இக்குற்றங்களைத் தடுக்கும் வகையிலும் மதுரை அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் தடய அறிவியல் துறை அலுவலகம் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details