தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு அனுமதி : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - Central Government ordered to respond

பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அனுமதி கோரிய மனு மீது, மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Permission to excavate Porpanaikottai: Central Government ordered to respond
Permission to excavate Porpanaikottai: Central Government ordered to respond

By

Published : Dec 23, 2020, 1:19 PM IST

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலபனையூரைச் சேர்ந்த கரு.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் பழமையான தொல்லியல் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. 160க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய அரசின் 420 தொல்லியல் பகுதிகளில் 109 இடங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

பொற்பனைகோட்டையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை உள்ளது. 20 அடி உயரம் கொண்ட இந்தக் கோட்டை 40 அடிக்கு கடினத்தன்மை கொண்டது. சங்க கால முறையிலான கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, பொற்பனைக்கோட்டை அமைந்துள்ள 45 ஏக்கர் பகுதியை உடனடியாக மத்திய அரசு பழமையான தொல்லியல் நினைவுச்சின்னமாக அறிவித்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று (டிச.23) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "சம்பந்தப்பட்ட பகுதியில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் அனுமதிக்காக பரிந்துரைத்துள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அகழாய்வு மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மனுவின் மீது மார்ச் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசு உரிய முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கட்டடக் கலையின் அற்புதம் கிலா முபாரக்

ABOUT THE AUTHOR

...view details