தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், "பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய 7ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். கடந்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி கவுன்சிலர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டோம். ஜனவரி 11இல் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென அந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. மூன்று முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 16 கவுன்சிலர்களின் திமுகவிற்கு ஏழு பேரும் அமமுக ஒருவரும் உள்ளனர்.
அதிமுகவால் வெற்றிபெற முடியாத சூழல் உள்ளதால் தேர்தலை நடத்த தயங்குகின்றனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அதிமுக வெற்றிபெற முடியாத சூழல் உள்ளதால் வேண்டுமென்றே தேர்தலை நடத்தாமல் தவிர்த்துவருகின்றனர் என்றார்.
இதற்கு அரசுத் தரப்பில், "பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தேர்தல் நடத்த தேவையான பாதுகாப்பை காவல் துறையினர் வழங்க வேண்டும் என்றும், தேர்தல் நடவடிக்கைகளை முழுமையாக காணொலியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தார்.