மதுரை:ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பிகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒன்பது ரயில்கள், போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க உதவும். இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருப்பதோடு, பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தவும் உதகின்றது.
அந்த வகையில், இன்று (செப்.24) நெல்லையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.30 மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தது. அப்போது ரயில் ஆர்வலர்களும், பொதுமக்களும் வந்தே பாரத் ரயிலை வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று மதியம் சென்னை செல்வதற்காக நெல்லையில் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு, பாஜக சார்பில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து, அவர்கள் மதுரையில் இருந்து கொடியசைத்து வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயில் போன்று கேக் வடிவமைக்கப்பட்டு வெட்டப்பட்டது. தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.