மதுரை:குறைந்தபட்சம் 160 கி.மீ. தூரம் கொண்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் ரயில்கள், 'மெமு' (Mainline Electric Multiple Unit - MEMU) ரயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அப்பகுதியிலுள்ள நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களும் பயன்படும் வகையில் இயக்கப்படுவதால், அக்குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். இதனால், பொதுமக்களும் பெரிதும் பயனடைவர்.
இதன் அடிப்படையில், மதுரையை அடிப்படையாக கொண்ட 'மெமு' ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, போடி, கொல்லம், திருச்சி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி வரை இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பேருந்து போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் தங்களது பயணத்தை பொதுமக்கள் பெற முடியும்.
கூடுதல் ரயில் சேவைக்காக காத்திருக்கும் மக்கள்: அந்த அடிப்படையில் மதுரையிலிருந்து 'மெமு' ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அகில பாரதிய கிரகாக் பஞ்சாயத்து என்ற அகில இந்திய நுகர்வோர் அமைப்பின் நிர்வாகியும் ரயில் ஆர்வலருமான அருண்பாண்டியன் கூறுகையில், 'மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி, திருநெல்வேலி, கொல்லம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு பகல் நேர ரயில் சேவை இருந்தாலும், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் இல்லை. இந்தப் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பொதுமக்கள், வணிகர்கள் தங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையை மையமாக கொண்டு 'எலக்ட்ரிக் ரயில்கள்': இதற்காக, பல்வேறு ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டோம். அதன் அடிப்படையில்தான், 'மெமு' ரயில்களை இயக்குவது ஒன்றே இதற்கான சிறந்த வழி என்பதைக் கண்டறிந்தோம். 'மெமு' ரயில் என்பது சென்னையில் தற்போது இயக்கப்படுகின்ற 'எலக்ட்ரிக் ட்ரெயின்'தான். இவற்றை 'எமு (Electric Multiple Unit - EMU)' என்பார்கள். படிகள், கழிவறை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கொண்டவையே 'மெமு' ரயில்கள். அதனை, தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
சிறு குறு வியாபாரிகளுக்கு கைக்கொடுக்கும் சேவை: இதற்காக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம். இந்த ரயில்களை இயக்கக் தொடங்கினால், அதனைப் பராமரிப்பு செய்வதற்கு தனியாக 'ஷெட்' அமைக்கப்பட வேண்டும். இதனை மதுரையிலோ? அல்லது அருகிலுள்ள கூடல்நகரிலோ? அல்லது வாய்ப்புள்ள மதுரை அருகிலுள்ள ஒரு பகுதியில் அமைக்கலாம். தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை திகழ்கிறது.
அதுமட்டுமன்றி, காய்கறியிலிருந்து பல்வேறு வகையான சந்தைகளுக்கு முக்கியமான இடமாகவும் உள்ளது. சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கான நகரமாகவும் உள்ளது. அதன்பொருட்டு, நாங்கள் மெமு ரயில்களை இயக்க மதுரையை பரிந்துரை செய்கிறோம். அதேபோன்று, இங்கு பல்வேறு வகையான தொழில் செய்யக்கூடிய திறமையுள்ள தொழிலாளர்கள் உள்ளனர்.
தென் மாவட்டங்களில் வர்த்தகம் மேம்பாட்டுக்கு வாய்ப்பு:சிவகாசியைப் பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில்; குறிப்பாக, இந்தியா முழுவதும் இங்கிருந்துதான் காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராஜபாளையத்தில் முழுவதும் நூற்பாலைகள், பஞ்சாலைகள் நிறைய உள்ளன. இங்கிருந்து பேண்டேஜ் துணிகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகின்றன. தென்காசியில் மரத்தொழில்கள், திருநெல்வேலி, சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் போன்ற சிற்றுண்டி வகைகள் இங்கு உள்ளன. அதேபோன்று தூத்துக்குடியில் பெரும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. பழனிக்கு பகல் நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.
சாமானியர்களின் பணம், நேரத்தை மிச்சமாக்கும் திட்டம்:ஆகையால், மேற்கண்ட ஊர்கள் அனைத்தும் அதிகபட்சம் 160 கி.மீ.க்குள் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு 'மெமு' ரயில்கள் காலை, மாலை என இயக்கப்பட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களாகவேகூட இயக்கலாம். பேருந்து கட்டணத்தைவிட, எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணம் பாதிதான். எடுத்துக்காட்டாக, மதுரையிலிருந்து நெல்லைக்கு செல்ல பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.130.
ஆனால், சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.75 தான். இதையெல்லாம் கணக்கிற்கொண்டு, தெற்கு ரயில்வே 'மெமு எக்ஸ்பிரஸ்' ரயில்களையே இயக்கலாம். இந்தத் திட்டம் தொலைநோக்கு அடிப்படையில் படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு:தற்போது இதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. காரணம், திருச்சி - திருநெல்வேலி, திருநெல்வேலி - தூத்துக்குடி இரட்டைப் பாதைகள் உள்ளன. மேலும் தற்போது, ரயிலின் பயண வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், 3 மணி நேர பயணத்தில் மேற்கண்ட நகரங்களை மதுரையிலிருந்து சென்றடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதன்மூலம், ரயில்வே தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். மெமு ரயில் இயக்கத்தில் பல்வேறு வசதிகள் உள்ள காரணத்தால், சாலை போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் ரயில் போக்குவரத்துக்கு மாற அதிக வாய்ப்பு உருவாகும்' என்றார்.
மெமு ரயில் சேவை; 6 தென் மாவட்டங்களில் வணிகம் மேம்படும்:ரயில் ஆர்வலர் ஆழ்வார் ராஜாகூறுகையில், 'மதுரை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்கள் செயல்படுகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, போடி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்கள் அனைத்தும் 100-லிருந்து 150 கி.மீ.க்குள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரைக்குள் வந்தே ஆக வேண்டும். நிறைய தொழில் நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் இங்கேதான் உள்ளது. பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் மதுரையில் உள்ளன.
மதுரையை மையமாக கொண்டு தனி 'மெமு ரயில் சேவை':ஆகவே, தென் மாவட்ட மக்கள் மதுரைக்கு வந்து செல்வது தவிர்க்க இயலாத ஒன்று. ஆகையால் இவர்களுக்கான ரயில் போக்குவரத்து என்பது இல்லை. குறிப்பாக, பகல் நேர ரயில்கள் மிகவும் குறைவு. இதன் அடிப்படையில் பகல் நேரங்களில் மேற்கண்ட தென் மாவட்டங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட வேண்டும். இதற்காக, மதுரையில் தனி 'மெமு ஷெட்' அமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மத்திய அரசும், தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்..