மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பழையூர்பட்டி கிராமம். பண்டைய வெள்ளலூர் நாட்டுப் பிரிவின் கீழ் வருகின்ற ஊர்களில் இது முக்கிய கிராமமாகும். பழையூர்பட்டி ஊரணியும், அங்குள்ள கிணறுகளும்தான் அவ்வூர் மக்கள் புழங்குவதற்கான முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள ஊரணி, சரியான முறையில் தூர்வாரப்படாமல், நீர்க் கொள்ளளவு மிகக் குறைந்தே இருந்து வந்தது. தற்போது புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரதான் என்ற நிறுவனத்தின் முன்முயற்சியில், கிராம மக்களும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து இந்த ஊரணியை சீரமைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராமத்தின் முக்கிய பிரமுகர் கருப்பையா கூறுகையில், "பழையூர்பட்டி வேளாண்மை நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் நாங்கள் இயங்கி வருகிறோம். பிரதான் அமைப்பின் நிதி உதவியோடும், கிராம மக்களின் பங்களிப்போடும் இந்த ஊரணியை ஆழப்படுத்தி சீரமைத்துள்ளோம். இதன் மூலம் தற்போது 300 குடும்பங்கள் பயனடையும். பிற கிராமங்களுக்கு முன்னோடியாக இந்த நீர்நிலை சீரமைப்புப் பணி உள்ளது" என்றார்.
பெரியார் கால்வாயிலிருந்துதான் ஊரணிக்கு தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குடிநீருக்கும் வழங்கப்பட்டுதான் ஊரணியில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை ஊருணி எட்டவிருப்பது கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டநத்தம்பட்டி ஊராட்சி தலைவர் உஷா இளையராஜா கூறுகையில், "ஊராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில் ஊரணி மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலத்தில் ஊரணியைச் சுற்றி வேலி, மரங்கள் அமைத்துப் பராமரிக்கும் பணியை ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.