மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கோ.புதூர் அருகேயுள்ளது முத்துராமலிங்கபுரம், சங்கர் நகர். இப்பகுதிகளில், சுமார் 2,000 வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வழிந்து ஓடுவதற்கு ஏற்ப மழைநீர் வடிகால் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்த வடிகாலில் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. புதூர் அருகேயுள்ள நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரும் இதே வடிகாலில்தான் செல்கிறது.
கழிவு நீர் முழுவதும் வடிகால் வழியே சென்று வண்டியூர் கண்மாயில் கலப்பதால், அப்பகுதியின் நிலத்தடி நீர் மிகுந்த மாசடைந்துள்ளது. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதனை சரிசெய்ய பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முதலமைச்சரின் கையில் கொடுத்த மனுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீர் வடிகாலில் கலக்கும் சாக்கடை நீர் பலகட்டப்போராட்டங்களை நடத்தியும் பலனில்லையென கூறும் அப்பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி, “கடந்த 9 ஆண்டுகளாக கழிநீர் கலப்பதைத் தடுக்க நாங்கள் பல கட்டப்போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல்வேறு மனுக்களை அளித்துள்ளோம். துர்நாற்றத்தால் எங்கள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வந்தபோது, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு அதுதொடர்பான மனுவை அவர் கையைப்பிடித்துக்கொடுத்தேன்.
சங்கர் நகர் மழைநீர் வடிகாலில் கலக்கும் கழிவு நீர் இருந்தபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சர்வேயர் காலனி, சூர்யா நகர், புதூர் பத்திரிகையாளர் நகர், வழக்கறிஞர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடய கழிவுநீர் அனைத்தும் வண்டியூர் கண்மாயில் கலக்கிறது. கண்மாயிலுள்ள நீரைப்பயன்படுத்தக்கூடிய மக்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் - மதுரை மாநகராட்சி